Thursday, February 27, 2025 12:02 pm
நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில், நாளை வெள்ளிக்கிழமை [28] காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு பொலிஸார் ஒட்டிய சம்மனை வீட்டில் இருந்தவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்கச் சென்றபோது பொலிஸாருக்கும், வீட்டின் பாதுகாவலருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கை கலப்பானது. அந்தக் காவலாளியை பொலிஸார் கடுமையாக போராடி, வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் பொலிஸார் சார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகாததால் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று பொலிஸார் மேலும் ஒரு சம்மனை ஒட்டினர். நாளை காலை 11 மணிக்குள் சீமான் விசாரணைக்கு வரவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்மன் ஒட்டிய பிறகு சீமானின் வீட்டு காவலாளி அந்த சம்மனை கிழித்து எறிந்துள்ளார். இதனை அறிந்த பொலிஸார் சம்மன் கிழித்தது தொடர்பாக விசாரணை நடத்த மீண்டும் சீமான் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காவலாளி பொலிஸாரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் காவலாளி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவலாளியை உள்ளே தள்ளியபடி பொலிஸார் உள்ளே நுழைந்தனர்.
இதையடுத்து காவலாளிக்கும், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பொலிஸாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இரு தரப்பினரும் கடுமையாக போராடினர். பின்னர் பொலிஸார், காவலாளியை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர் உள்ளே போக மறுத்து நான் எக்ஸ் ஆர்மி என்று சொல்லவே, நீ யாரா இருந்தா என்ன உள்ளே போ என்று பொலிஸார் அவரை உள்ளே திணித்தனர். அப்போதுதான் காவலாளி கையில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் கடுமையாக போராடி அதையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தின்போது கீழே நடந்த அமளி துமளியைப் பார்த்து வெளியில் ஓடி வந்த சீமான் மனைவி கயல்விழி, இன்ஸ்பெக்டரிடம் நடந்ததற்காக ஸாரி சொல்லி மன்னிப்பு கேட்டார். தற்போது சீமான் ஊரில் இல்லை. அவர் கிருஷ்ணகிரியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு சீமான் வராவிட்டால் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

