Monday, November 2, 2026 9:44 am
- ஜனாதிபதி அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் சில வரிகளை மேலும் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அறிவித்துள்ளார். அரச வருவாய் இலக்குகளைப் பேணுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு குறித்துப் பேசிய ஜனாதிபதி, தான் பதவியேற்றதிலிருந்து புதிய வரிகள் எதையும் விதிக்காமலேயே, அரசாங்கம் தனது வருவாய் இலக்குகளை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய வரிகள் எதையும் விதிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே இருந்த சில வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளோம். வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சில வரிகளை இன்னும் குறைக்கவுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
முன்மொழியப்பட்ட வரி குறைப்புகள், அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
முந்தைய அரசாங்கங்கள் பெரும்பாலும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடையத் தவறியதாகவும், உண்மையான வருவாய் எதிர்பார்ப்பில் சுமார் 90 சதவீதத்தை மட்டுமே எட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் தனது வருவாய் எதிர்பார்ப்புகளை விஞ்சியதுடன், முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியையும் (primary budget surplus) பேணி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியைப் பேணுவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

