Thursday, September 3, 2026 10:47 pm
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் ,வழிகாட்டல்கள் ஆகியவற்றை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

