Wednesday, July 15, 2026 2:54 pm
வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவிகளை நீக்கி மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரது ஆட்சேபனைப் பதில்களை இம் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மாநகர முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கடந்த மூன்றாம் திகதி விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து மன்றால் உத்தரவிடப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்தின் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

