Monday, July 13, 2026 10:20 am
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளதுடன் கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை
யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டு சென்று விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்று வீதிக்கடமையில் இருந்த பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது. சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சொதித்துள்ளனர். சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2.5 கிராம் ஐஸ் போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பொலிஸாரின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

