Friday, July 10, 2026 7:53 pm
எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி , பிற தொற்றுகள் உள்ளிட்ட பாலியல் நோய்களைக் (STDs) கண்டறியும் நடமாடும் இரத்தப் பரிசோதனைத் திட்டத்தை கொழும்பு , கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தொடங்கியுள்ளது.
தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால், சமூகங்களுக்குள் இரத்தப் பரிசோதனை சேவைகளை வழங்கும் சிறப்பு நடமாடும் மருத்துவ நிலையங்கள் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது.
பரிசோதனைக்கு உட்படுபவர்களின் தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிசெய்து, இந்தப் பரிசோதனைகள் தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
தொற்று அல்லது மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட்ட எவருக்கும் உரிய ஆலோசனை, மருத்துவ அறிவுரை , சிகிச்சை அன்பன வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் பாலியல் நோய்கள் பரவுவதைக் குறைக்க உதவுவதோடு, ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கான அணுகலை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சு கூறியுள்ளது.

