Friday, July 10, 2026 7:23 pm
பாகிஸ்தானின் ஓர்மாரா நகருக்கு அருகிலுள்ள கடலில், காணாமல் போன கே2 ஏர்வேஸ் சரக்கு போயிங் 737 விமானத்தின் உடைந்த பாகங்களை 12 மணி நேர தேடுதல் , மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படை புதன்கிழமை கண்டுபிடித்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் மாவட்டத்தில் உள்ள ஓர்மாரா என்ற கடலோர நகரத்திலிருந்து சுமார் 53 கடல் மைல் தெற்கே இந்த உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மீட்புப் பணிகள் தொடர்கின்றன, மேலும் இந்த நடவடிக்கை முன்னேறும்போது கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறியது.
ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த இந்த சரக்கு விமானம், வழிசெலுத்தல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயக்கப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சிக்கு மேற்கே சுமார் 155 கடல் மைல் தொலைவில் திடீரெனக் கீழிறங்கி, திசையைத் தீவிரமாக மாற்றி, ரேடார் வானொலித் தொடர்பிலிருந்து மறைந்து போனதாக பாகிஸ்தான் விமானப்படை தனது முந்தைய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

