Thursday, June 11, 2026 3:26 pm
எழுச்சி பாடல் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (11) மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பு நடைபெற்றது.
போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் , மன்னார் பிரஜைகள் குழு , மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் , அரசியல் பிரதிநிதிகள் , பெண்கள் அமைப்புக்கள் ஆகிய அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் விடுதலையில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டகாரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திடீர் என குறித்த பகுதிக்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் பதாகை ஒன்றில் எழுதப்பட்ட வசனம் குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறிதுநேரம் குறித்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

