Tuesday, June 9, 2026 10:55 am
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு , 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, அவருக்கு 06 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து , கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி , குற்றவாளியான அவருக்கு தண்டனை விபரங்களை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அது தொடர்பான விடயங்களை சட்டத்தரணிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்வைத்து வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் , அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் ‘ஊழல்’ புரிந்ததாகக் குற்றம் சுமத்தி , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

