Saturday, May 23, 2026 2:31 am
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், உட்கட்சி மோதல் தலைதூக்கியது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் மோதிக்கொண்டது. ஒரு கட்டத்தில் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். தவெக தங்கள் எம்எல்ஏக்களை இழுத்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.
அடுத்தாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 30 மாவட்ட செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதுமட்டுமில்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமனம் செய்தார். இந்த நிலையில் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் நியமிக்க முதலமைச்சர் விஜய் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் எந்தவித பிளவும் இல்லை. எங்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடு தான். கருத்து வேறுபாட்டை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இப்பவும், எப்பவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர், எனவே தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் பதவிக்காக தவெகவை ஆதரிப்பதாக தொடர்ந்து தவறான தகவலை பரப்புகிறார்கள். இதெல்லாம் தனியாக ஒரு பெரிய டீம் பரப்பி வருகிறது. அமைச்சரவையில் இடம் தொடர்பாக ஆளுங்கட்சி தரப்பு பதில் அளித்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அமைச்சரவையில் இடம்பிடிப்பதாக நாங்கள் முயல்வதாக எழுதுகிறார்கள். ரொம்ப வருத்தமாக உள்ளது. தவறான எண்ணத்தை எடுத்து மக்களிடம் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.
நாங்கள் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல, பெரிய அஜெண்டா கொடுத்தோம். கடந்த திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும் என பட்டியல் கொடுக்கப்பட்டது. பதவிக்காக நாங்கள் எதுவும் வரவில்லை. ஆனாலும் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தவெகவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் ஆதரவு கொடுத்தோம். தவெகவும் திமுகவை எதிர்க்கிறது. நாங்களும் எதிர்க்கிறோம் என கூறினார். எங்களை பொறுத்தவரை பொதுக்குழு கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
மீண்டும் அம்மா ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் அமைய வேண்டும். அதிமுக எங்கள் உயிர், பல தலைமுறைகளாக கட்சியில் உள்ளோம். எனவே அதிமுகவை உடைக்கவோ பிரிக்கவோ இல்லை. தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

