Saturday, January 24, 2026 10:03 pm
: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும்,திமுக அமைச்சரான பி.கே. சேகர்பாபுவும் இன்று தமிழக சட்டசபையில், சபாநாயகர் அப்பாவுவின் அறையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனையில் இருவரும் மிக நெருக்கமாக உரையாடியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திடீர் சந்திப்பிற்குப் பின்னால் பல அரசியல் காரணங்களை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் , வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்ஸும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், அதிமுக (எடப்பாடி அணி), பாஜக ஆகியவற்றுடனான உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து திமுக தரப்புடன் ஆலோசித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
டிடிவி தினகரன் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளதாலும், செங்கோட்டையன் போன்றவர்கள் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்துவிட்டதாலும், ஓபிஎஸ் தற்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளார். இந்த இக்கட்டான சூழலில் திமுகவில் ஓபிஎஸ் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் தரப்போ அல்லது அமைச்சர் சேகர்பாபு தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனச் சொல்லப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

