Wednesday, January 21, 2026 6:17 am
சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டவரை இஸ்ரேலுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் 43 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேலிய காவல்துறையின் சர்வதேச பிரிவு (இன்டர்போல்) படி, கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது இஸ்ரேலிய சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னர், ஜோர்தான் ,எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து செயல்படும் மனித கடத்தல்காரர்கள் எகிப்து ஜோர்டான் எல்லைகள் ,பாலைவன வழிகள் வழியாக ஏராளமான இலங்கையர்களை இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற மனித கடத்தல் நடவடிக்கைகள் இப்போது கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று தூதரகம் மேலும் கூறியது.
தற்போதைய போர் போன்ற பாதுகாப்பு சூழலில், மனித கடத்தல்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், பாலைவன எல்லைகள் வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சிப்பதைத் தவிர்க்குமாறும் அனைத்து இலங்கையர்களையும் இலங்கை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

