Thursday, January 8, 2026 11:22 am
வங்காள வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தம் இலங்கைக்கு எச்சரிக்கை
மட்டக்களப்பில் இருந்து சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகவும் எச்சரிக்கயாக இருக்குமாறும் , பேரிடர் மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தம் இன்று (ஜனவரி 8) கிழக்கு கடற்கரையை அடையும் என்று வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார். இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, தீவு முழுவதும் மோசமான வானிலையை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா , மத்திய மாகாணங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மாகாணத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் நுவரெலியா , மாத்தளை ஆகிய மாவட்டங்கள் ஜனவரி 9 ஆம் திகதி அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய ம, கிழக்கு ஆகிய மாகாணங்களில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) முன்கூட்டிய நிலச்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர ,நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள நில்தண்டாஹின்ன ,வலப்பேனை ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது.தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக DMC உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் வானிலையின் முன்னேற்றத்தைப் பொறுத்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற அவசர குழுக்கள் தயாராக உள்ளன.

