Wednesday, January 7, 2026 5:10 pm
கிரீன்லாந்து தீவு அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டென்மார்க் அரசு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் அபரிமிதமான கனிம வளங்களை குறிவைத்தே அமெரிக்கா இத்தகைய உரிமை கோரல்களை முன்வைப்பதாக டென்மார்க் குற்றம் சாட்டியுள்ளது. வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயன்றால், கடந்த 80 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பாதுகாப்பு, ராஜதந்திர உறவுகள் என்பன முற்றிலுமாக சிதைந்துவிடும் என்று டென்மார்க் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் முழு ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும் டென்மார்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த அதிரடி பேச்சு, ஆர்க்டிக் பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

