Monday, December 29, 2025 4:18 pm
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள், வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டன. அந்தப் படகுகள் சமாச நிர்வாகத்தினர் முன்பாக கலந்துரையாடலின் மூலம் தெரிவு செய்து வழங்கப்பட்டு வந்தன.
இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர் குற்றச்சாட்டை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மக்கள் பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இரு படகுகளையும் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் ஏலத்தில் விற்று விட்டு அதன் பெறுமதியான 18 இலட்சம் ரூபாவை பக்கச்சார்பாக ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்தளித்துள்ளனர். மக்கள் எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட படகை விற்பனை செய்துவிட்டு அதன் தொகையை ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்துள்ள நாகர்கோவில் கடற்தொழிலாளர் சங்கத்தின் மிக மோசமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


