Wednesday, December 24, 2025 1:56 pm
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட் பிளாக் – 2 (BlueBird Block-2) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவது இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
இதன் மூலம் தொலைத்தொடர்பு கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதன் மூலம் 6100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இதுபோன்ற அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்னதாக பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவின. தற்போது அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ ஏவியுள்ளது.


