Tuesday, December 23, 2025 1:37 pm
இலங்கைத்தீவை தாக்கிய டிட்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
ஒப்பரேஷன் சாகர் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்லி பாலத்தை மெய்நிகர் மூலம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இணைந்து அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக இலங்கை ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்கவுக்கு பிரதமரின் செய்தியை கொண்டு வந்ததாகவும், இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் சூறாவளி டித்வாவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும் கூறினார்.
இந்தியப் பிரதமர் மோடியின் கடிதத்தின் மூலம் முதல் பதிலளிப்பாளராக (First Responder) இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையின் மீள் கட்டுமானத்துக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த உதவியை எவ்வாறு மிக விரைவாக வழங்குவது என்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
இந்தியா “Neighbourhood First” மற்றும் “MAHASAGAR” கொள்கைகளுக்கு அமைவாக இலங்கை நெருக்கடியை எதிர்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் துணைநின்றுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பில் USD 350 மில்லியன் சலுகை கடன்களாகவும், USD 100 மில்லியன் மானியங்களாகவும் வழங்கப்படவுள்ளது. இது வீதி, ரயில், பாலங்கள் மீளமைப்பு, வீடுகள் கட்டுதல், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் எதிர்கால பேரிடர் தயார்நிலை போன்ற துறைகளை உள்ளடக்கும்.

