Tuesday, December 16, 2025 12:49 pm
WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜோன் சீனா தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்.
1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்காவில் உள்ள Massachusetts மாகாணத்தில் ஜான் சீனா பிறந்தார். சிறு வயதிலேயே தற்காப்பு கலைகளை பயிலத் தொடங்கிய அவர் கல்லூரிபடிப்புக்குப் பின்னர் Body Building கவனம் செலுத்த தொடங்கினார். இதன்போது மல்யுத்தத்திலும் ஆர்வம் ஏற்படவே கலிபோர்னியாவுக்கு சென்று அது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டார்.
1999ல் தொழில்முறையிலான மல்யுத்த போட்டியில் அறிமுகமானார். கடந்த 2002ல் முதன்முறையாக WWE எனப்படும் World Wrestling Entertainment போட்டியில் களமிறங்கிய ஜோன் சீனா 17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தனது தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே ஜான் சீனாவை கூற வேண்டும். அவர் வெறுமனே மல்யுத்த வீரர் மட்டுமல்லாது ‘தி சூசைட் ஸ்குவாட்’, ‘ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
90-ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத நினைவுகளில் WWE நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதேநேரம் ஜோன் சீனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. சிறுவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பிலும் இவருக்கான தனி இடம் உண்டு.

WWE போட்டியின்போது ஜான் சீனாவின் The Time Is Now என்ற என்ட்ரி இசை பலரது தொலைபேசி ரிங்டோனாக இருந்தது. WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் இவர் மோதியுள்ளார். u can’t see me என்பது ஜோன் சீனாவின் புகழ்பெற்ற வசனமாக காணபட்டது. ரிங்குக்கள் தனது எதிராளியை வீழ்த்திய பின் இந்த வரியை அவர் கூறுவது வழக்கமாகும். அரங்கில் உள்ள பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்த வரியை எதிரொலிப்பார்கள்.
அண்மையில் WWE-ல் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஜோன்சீனா அறிவித்த நிலையில் ‘Saturday Night’s Main Event நிகழ்ச்சியில் அவரது கடைசி போட்டி நடைபெற்றது. ஜோன் சீனாவின் கடைசி போட்டியை காண அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் நிறைந்திருந்தனர்.
அவரை எதிர்த்து போட்டியிடவிருந்த Gunther உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்கள் அவரை கிண்டல் செய்ய தொடங்கினர். அதே நேரம் ஜோன் சீனா உள்ளே நுழைந்ததும் அனைவரும் உற்சாகக் குரலெழுப்பினர். போட்டி ஆரம்பமானதும் இருவருமே சிறப்பாகச் சண்டையிட தொடங்கினர். ஜோன் சீனாவின் சிக்னேச்சர் மூவ்களை சமாளித்து Gunther எதிர் தாக்குதல் நடத்தினார். ஒரு கட்டத்தில் குந்தர் போட்ட ‘Sleeper Hold’ பிடியில் இருந்து ஜோன் சீனாவால் தப்ப முடியவில்லை.
தனது கடைசி போட்டியில் ஜோன்சீனா தோல்வியை தழுவினார். அவரது ரசிகர்கள் அனைவரையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து WWE வீரர்கள் பலரும் ரிங்குக்கு வந்து ஜான் சீனாவுக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கேமராவை நோக்கியும் வணக்கம் செலுத்தினார் ஜோன் சீனா . அவர் குறித்த குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
இறுதியாக அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண் கலங்கியபடி ஜோன் சீனாவுக்கு பிரியா விடை அளித்தனர்.
இவ்வாறாக WWE வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஜோன் சீனா ஓய்வு பெற்றது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓய்வின் பின் ஜோன் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

