Wednesday, December 10, 2025 10:16 am
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளார்.
தற்போதுள்ள துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களையும், அளிக்கைகளையும் மதிப்பீடு செய்து தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும் பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம்இ மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின்படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி – ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

