Friday, December 5, 2025 3:36 pm
அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைமுகம் இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைவசம் இருப்பதுடன் முழுக்க முழுக்க கடன் வாங்கி செய்யப்பட்ட விடயம். காங்கேசன்துறைமுகத்தை பொறுத்த வரை அதற்கான நிதியை அன்பளிப்பாக தருவதாக இந்தியா கூறியிருக்கிறது. அந்த நிதியை வைத்து கொண்டு நிச்சயமாக காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண அபிவிருத்தி கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிக இழப்புகளை சந்தித்தது. இந்த அனர்த்தம் என்பது ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்தது. எதிர்காலம் என்பது பொருளாதார ரீதியாக சூனியமான நிலையாக இருக்கிறது.
வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் எமக்கு மிக மிக அவசியமானது யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைமுகமும், பலாலி விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
அது அபிவிருத்தி செய்யப்படுவதன் ஊடாகத்தான் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய உணவு பொருட்கள், ஆடைகள் போன்றவை நேரடியாக யாழ்ப்பாணம் வர முடியும். யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவும், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவும் பல்வேறுபட்ட வழிகளில் அது எங்களுக்கு கூடுதலான பொருளாதார ரீதியான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அமைச்சர்கள் இதனை சாத்தியமில்லை என பேசுகிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் தோல்வியில் முடிந்த துறைமுகமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைமுகமும் தோல்வியில் முடிவடையும் எனச் சொல்லியிருந்தார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சீனாவின் கைவசம் போய் இருப்பதுடன் முழுக்க முழுக்க கடன் வாங்கி செய்யப்பட்ட விடயம். காங்கேசன்துறைமுகத்தை பொறுத்த வரை தாங்கள் அதற்கான நிதியை அன்பளிப்பாக தருவதாக இந்தியா கூறியிருக்கிறது.
விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நிறைய சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வரமுடியும். அவ்வாறு வருவதன் ஊடாக யாழ்ப்பாணம் மாத்திரம் அல்ல வடக்கு மாகாணத்தின் பெரும் பகுதி பல்வேறுபட்ட வளர்ச்சியை அடைவதற்கு துணை புரியும்.
அரசாங்கம் இதற்கான அனுமதியை கொடுக்காமல் நீண்ட காலமாக தாமதித்து கொண்டு வருவது ஏற்புடைய விடயம் அல்ல.
ஒரு பக்கத்தில் பார்க்கின்ற பொழுது நாடு மிக மோசமான பொருளாதார பிரச்சினைக்குள் மாட்டியிருக்கிறது. இன்று ஏற்பட்டுள்ள அனர்த்தம் என்பது நாட்டை இன்னமும் பாதாளத்துக்குள் தள்ளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோடி டொலர் தற்போது இலங்கைக்கு தேவையாக இருக்கிறது. நமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தினால் நிச்சயமாக இந்த இடர்பாடுகள் ஊடாக முன்னேற முடியும்.
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் அல்ல எனக் கூறக்கூடியவர்கள் யாழ்ப்பாணத்திற்கோ, வடக்கிக்கோ கிடைக்கக்கூடிய அபிவிருத்திகளை ஏன் தடை செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக கிடைக்கக்கூடிய நிதியைக் கொண்டு இந்த அபிவிருத்தியை செய்யலாம். இதற்கான நிதியை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமும் அல்ல.
அமைச்சர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து விரைவான ஒப்புதல்களை கொடுப்பதன் ஊடாக இலங்கையினுடைய ஒரு பகுதியான வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெரிய வருமானங்களை கொண்டு வரும். அதனை கவனத்தில் எடுத்து இனவாத கண்ணோட்டத்தில் பார்க்காமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

