Tuesday, October 28, 2025 11:11 am
கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையும் பெருமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இது நாட்டின் அரசியல் தரப்புக்களிலும் பலவாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்போது அநுர தலைமையிலான அரசாங்கம் பல்வேறு விதமான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு, இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பலவாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
அதனடிப்படையில் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில் நேற்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளன. இந்த நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும, இலங்கை சார்பாக இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை சூரியப்பெரும மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் அதிகாரப்பூர்வமாக பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதே போன்று ஆக்கபூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் நிலுவையில் உள்ள கடன் மறுசீரமைத்து இலங்கைக்கு கடன் நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மறுசீரமைக்கப்பட்ட மொத்த கடன்களை அவுஸ்திரேலிய இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

