பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு பதவி விலகியுள்ளார், இது நாட்டை ஆழமான அரசியல் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இராஜினாமாவை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏற்றுக்கொண்டதாக எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.
லெகோர்னு தனது அமைச்சரவையை நியமித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ,அரசியல் போட்டியாளர்கள் அவரது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இராஜினாமா செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் தனது அமைச்சர்களை நியமித்ததாக அறிவித்தார், புதிய அமைச்சரவை அதன் முதல் கூட்டத்தை திங்கள் கிழமை பிற்பகல் நடத்த உள்ளது.
தனது இராஜினாமா உரையில், பிரான்சில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் தங்களுக்கென பெரும்பான்மை இருப்பது போல் நடந்து கொள்வதாகக் கூறினார்.
“நான் சமரசம் செய்யத் தயாராக இருந்தேன், ஆனால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மற்ற அரசியல் கட்சி அதன் முழு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியது,” என்று அவர் பிரெஞ்சு பிரதமரின் தலைமையகமான மடிக்னான் அரண்மனையின் முற்றத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.
மக்ரோனின் கூட்டாளியான 39 வயதான லெகோர்னு, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஏழாவது பிரதமராகவும் – இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமராகவும் இருந்தார்.