கிரேன் மூலம் தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்த தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், அனுமதி இல்லாமலும் செயல்பட்டதாக கூறி கிரேன் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களைச் சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாகையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட விஜய், மக்கள் நலப்பணிகளை செய்யாத திமுக அரசையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.
திருவாரூரில் பிரசாரம் செய்யும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த விஜய்க்கு கிரேன் மூலம் தவெக கட்சியினர் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பிரச்சார வாகனத்தின் மீது ஏறி அதனை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்யவுள்ள இடத்திற்கு மீண்டும் புறப்பட்டார் விஜய். திருவாரூரில் மாலையில் மக்கள் மத்தியில் உரையாற்றினார் விஜய். இந்நிலையில், திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூடியுள்ள இடத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், அனுமதி இல்லாமலும் செயல்பட்டதாக கூறி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் ஜே.சி.பி உரிமையாளர் ராஜேஷ் ,மனோ, தவெக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாகையில் தவெகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டபோது, பொலிஸ் விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர். விஜய் பேசிய இடத்துக்கு அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீதும் ஏராளமான தொண்டர்கள் ஏறி அமர்ந்ததால், அது பாரம் தாங்காமல் சரிந்து கீழே விழுந்தது. மேலும், சுவரில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகளும் சாய்ந்தன. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில், நிபந்தனைகளை மீறி, தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமார், துணைச் செயலாளர் நரேஷ்குமார் , நிர்வாகிகள் மீது பொலிஸா வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே தவெகவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், “உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? திருச்சி தவெக கூட்டத்தின்போது சேதப்படுத்திய பொது சொத்துக்களுக்கான இழப்பீட்டை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும். பொதுச் சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க வேண்டும்” என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.