ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று,சனிக்கிழமை,[13] 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜூலை மாதத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இது மீண்டும் நிகழ்ந்துள்ளதால் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இருந்தாலும், சுனாமி அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜூலை மாத நிலநடுக்கம், கடந்த 14 ஆண்டுகளில் உலகிலேயே மிக வலுவான ஒன்றாகக் கருதப்பட்டது.அந்தச் சமயம் ஜப்பான், அமெரிக்கா ,பசிபிக் தீவு நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கம்சட்கா தீபகற்பம், நில அதிர்வு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. 1952 ஆம் ஆண்டில், இங்கு 9.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். சமீபத்திய இந்த நில அதிர்வுகள், அப்பகுதியின் புவியியல் உறுதியற்ற தன்மையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.