நேபாளத்தில், இளைஞர்களின் புரட்சியால் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த போட்டியில், பிரபல ராப் பாடகர் பலேன் ஷா-வின் பெயர் முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளத்தில், ஊழல் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் எல்லை மீறி சென்ற நிலையில், பிரதமராக இருந்த சர்மா ஒலி ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு ஆட்சி கவிழ்ந்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியும் நேற்றே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அங்கு புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பிரபல ராப் பாடகரும், காத்மாண்டு மேயருமான பலேன் ஷாவின் பெயரை அந்நாட்டு இளம் தலைமுறை பரிந்துரைத்து வருகிறது.
நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அதன் பிறகு கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்துவந்தது. இந்த நிலையில், அங்கு ஊழல் மலிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் இளைஞர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததால், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தடை திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடேலும் ராஜினாமா செய்தார்.
இதனால், அங்கு ஆட்சி கவிழ்ந்த நிலையில், நாடு நிச்சயமற்ற நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சூழலில் தான் நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த போட்டியில் முன்னிலையில் இருப்பவர் தான் பிரபல ராப் பாடகரும், காத்மண்ட் மேயருமான பலேன் ஷா.
தற்போது காத்மண்ட் மேயராக இருக்கும் பலேன் ஷா தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அந்நாட்டு இளம் படை பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அங்கு சமூக வலைதள தடை நீக்கப்பட்ட நிலையில், பலேன் ஷா-விற்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
பலேன் ஷா என்று அழைக்கப்படும் பலேந்திர ஷா, 1990-ல் பிறந்தவர். இவர் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்துள்ளார்.
பின்னர், நேபாளத்தில் ராப் இசை , ஹிப் ஹாப் இசை பாடகராகவும், பாடலாசிரியராகவும் மிகவும் பிரபலமடைந்தார். தனது இசை நிகழ்ச்சிகள் மூலமாகவே, ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால், இளைஞர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்ட் மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பலேன் ஷா, 61,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று வெற்றியடைந்து கவனம் பெற்றார். மேயரான பிறகும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து சமூக பிரச்னைகள் குறித்து பேசி வந்தார். இதனால், இவரையே அடுத்த பிரதமராக்க வேண்டும் என ஜென் Z தலைமுறை தற்போது ட்ரெண்ட் செய்து வருகிறது.