சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக சமூக ஊடகத்தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளது.
காத்மண்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது 19 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை அரசாங்கம் திரும்பப் பெற்றதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிருத்வி சுப்பா குருங் தெரிவித்தார்.
“பல்வேறு சுயநல மையங்களிலிருந்து ஊடுருவல்” காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் தான் வருத்தமடைந்ததாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 15 நாட்களுக்குள் காரணங்களைக் கண்டறியவும், இழப்புகளை மதிப்பிடவும், நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்று திங்கட்கிழமை இரவு ஒரு அறிக்கையில் ஒலி தெரிவித்தார்.
கடந்த வாரம் அரசாங்கம் பேஸ்புக் உட்பட பல சமூக ஊடக தளங்களுக்கான அணுகலைத் தடுக்க முடிவு செய்தது, இந்த முடிவு இளைஞர்களிடையே கோபத்தைத் தூண்டியது.
போலி ஐடிகள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவற்றிற்கு எதிரான கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அரசாங்கத்தில் பதிவு செய்யத் தவறிய சமூக ஊடக தளங்களுக்கு இந்த பணிநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.