காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் பிலிமோன் யாங் கடுமையாகக் கண்டித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஸா பகுதியின் தெற்கே கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்பட்டதை ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் கடுமையாகக் கண்டித்ததாக செய்தித் தொடர்பாளர் ஷரோன் பிர்ச் தெரிவித்தார்.
“அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
காஸாவில் உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்ற தனது அவசர கோரிக்கையை ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். மனிதாபிமான அமைப்புகளுக்கு முழுமையான, விரைவான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு பெரிய அளவில் மிகவும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் திங்களன்று ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.