சுங்கத் திணைக்களம் 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் மாத்திரம் 231 பில்லியன் ரூபா அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாண்டு சுங்கத் திணைக்களத்துக்கான வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்
2025 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 1227 பில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை சுங்க திணைக்களம் வருமானமாகப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில் அதிக வருமானமாக 231 பில்லியன் ரூபா சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரே மாதத்தில் இவ்வாறு அதிகூடிய கிடைக்கப் பெற்றதில்லை. இவ்வாண்டு எமது வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாவாகும்.
அந்த இலக்கில் தற்போது 1227 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் திகதி வரை எட்டப்பட வேண்டிய இலக்கை விட 116 பில்லியன் ரூபா அதிக வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் விரைவாக எமது இலக்கை அடைய முடியும் என்று நம்புகின்றோம்.
இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கு சுங்கத் திணைக்களம் மாத்திரமே காரணமல்ல. ஏனைய நிறுவனங்கள், திணைக்களங்களில் பங்களிப்பும் அதில் உள்ளது.
எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து முறையாக செயற்படும் பட்சத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படக் கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.