இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் திகதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடக்க உள்ளது.
எட்ஜ்பாஸ்டன் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இதுவரை இருந்ததே இல்லை , கடந்த 1967ம் ஆண்டு முதல் இந்திய அணி இங்கு விளையாடி வருகிறது. 8 டெஸ்ட் போட்டிகளில் இங்கு ஆடி இதுவரை 1 போட்டியில் கூட வெற்றி பெற்றதே இல்லை. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் இந்த 58 ஆண்டுகால வரலாற்றில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சதம் அடித்த இந்தியர்கள் 4 வீரர்கள் மட்டுமே ஆவார்கள்.
சச்சின் டெண்டுல்கர்:
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன்முதலில் சதம் விளாசிய இந்தியர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1996ம் ஆண்டு நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை சச்சின் படைத்தார். அவர் அந்த போட்டியின் 3வது இன்னிங்சில் அதாவது இந்தியாவின் டெண்டுல்கர் 122 ஓட்டங்களை விளாசினார். அதில் 19 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். அந்த இன்னிங்சில் சச்சின் மட்டுமே 20 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர். அந்த போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.
விராட் கோலி:
அந்த போட்டிக்கு பிறகு 22 ஆண்டுகளுக்கு பிறகே மற்றொரு இந்திய வீரர் அங்கு சதம் அடிக்க முடிந்தது. 2018ம் ஆண்டு நடந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். டெயில் எண்டர்ஸ் உதவியுடன் விராட் கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 149 ர ஓட்டங்கள் எடுத்தார். அந்த போட்டியிலும் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ரிஷப்பண்ட்:
கடந்த 2022ம் ஆண்டு இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணிக்காக ரிஷப்பண்ட் சதம் விளாசினார். அவர் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 111 பந்துகளில் 20 பவுண்டரி 4 சிக்ஸருடன் 146 ஓட்டங்கள் என்று அதிரடி சதம் விளாசினார். ஆனாலும், அந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சால் இந்தியா தோல்வியைத் தழுவியது.
ரவீந்திர ஜடேஜா:
கடந்த 2022ம் ஆண்டு ரிஷப்பண்ட் சதம் விளாசிய அதே போட்டியில் இந்திய அணி்காக சதம் விளாசியவர் ரவீந்திர ஜடேஜா. அவர் 194 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 104 ஓட்டங்கள் எடுத்தார். 378 ர ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி ரூட் – பார்ஸ்டோ அபார சதத்தால் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் இந்த மைதானத்தில் இந்திய அணி எப்படி சிறப்பாக ஆடி வெற்றி பெறப்போகிறது? என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது.