தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தலைவர் சிஜி போங் சந்தித்தார்.
இது சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தது. சிங்கப்பூர் தூதரகம் எக்ஸ் தளத்தில் இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, “கோலிவுட் சூப்பர் ஸ்டார் தளபதி நடிகர் விஜயை இன்று மதியம் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அவர் நடித்த உங்களுக்குப் பிடித்த தமிழ் படம் எது? – சிஜி போங்” என்று பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவு விரைவாக வைரலானது, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விஜய் படங்களான கில்லி, லியோ, துப்பாக்கி, கத்தி, மாஸ்டர்,தெறி உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தனது கடைசி படத்தின் பணிகளை முடித்து அரசியலுக்கு முழுமையாக மாறுவதற்கு தயாராகி வரும் நிலையில், அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, எச் வினோத் எழுதி இயக்கி வரும் ஜனநாயகன் திரைப்படம், அவரது சினிமா பயணத்திற்கு ஒரு பிரமாண்டமான பிரியாவிடையாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.