நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில், கோவிந்தா கோவிந்தா என்று வரும் பாடலை நிறுத்திவிடுங்கள் என்றும், அந்த பாட்டோடு படம் வெளியிடப்பட்டால் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குள் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்துவோம் என்று ஜனசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவிந்தா நாமத்தை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாக ஜனசேனா கட்சி புகார் தெரிவித்துள்ளது.
ஜனசேனா கட்சியின் திருப்பதி நிர்வாகி கிரண் ராயர் என்பவர், டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருமலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எதும் எடுக்காவிடில் திருப்பதிக்கு வரும் தமிழக பக்தர்களை தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
திருப்பதிக்குச் சென்ற தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் இந்த பாடலை மடிக்கணினியில் போட்டு காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தனர்.இந்த படத்தில் கோவிந்தா கோவிந்தா என்று வெளியாகி உள்ள பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக உள்ளதாக விமர்சனம் எழுந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் கோவிந்த கோவிந்தா பாடலை வெளியிடக்கூடாது, நீக்க வேண்டும் என்றும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.