சவூதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 600 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு உறுதிமொழியைப் பெற்ற பின்னர் சிரியா மீதான தடைகளை நீக்குவதாக உறுதியளித்தார்.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, முதலீட்டு உறுதிமொழியில் “எரிசக்தி பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில், தொழில்நுட்பத் தலைமை மற்றும் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான கனிமங்களுக்கான அணுகல்” உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் அடங்கும். இந்த ஒப்பந்தங்களில் “வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு விற்பனை ஒப்பந்தம் – கிட்டத்தட்ட 142 பில்லியன் டொலர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சிரியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக, சிரியாவிற்கு எதிரான தடைகளை நிறுத்த நான் உத்தரவிடுவேன்,” என்று ட்ரம்ப் கூறினார், டமாஸ்கஸுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான முதல் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளதைக் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு ட்ரம்ப் தனது முதல் பெரிய வெளிநாட்டுப் பயணமாக செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்கிறார். சவூதிக்குச் சென்ற டரம்ப் அங்கிருந்து கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.