இலங்கை -இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்த Media Fest Sri Lanka ஏப்ரல் மாதம் 25-26 திகதிகளில் கொழும்பில் நடசிபெறச் உள்ளது.
இலங்கை ஊடகப் பரப்பினை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளின் ஓர் அங்கமான இது SLIMFA அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முறையாக நடைபெறும் இந்த ஒன்று கூடலில் குழு விவாதங்கள், செயலமர்வுகள், சிறந்த அனுபவங்களை பகிர்தல், வெவ்வேறு தலைப்புகளிலான அமர்வுகள், மற்றும் ஏனைய அம்சங்கள் உள்ளிட்ட ஊடகத்துறை சார்ந்த பரந்த விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
“புதிய ஊடக பரப்பை ஒன்றாக வழிநடத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வானது சமகால ஊடக செல்நெறிகள் மற்றும் புதிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது. ஊடகவியலில் AI, மொபைல் ஊடகவியல், ஊடக பணமாக்குதல், தரவு ஊடகவியல், போலி தகவல் மற்றும் உண்மை சரிபார்ப்பு, கருத்துருவாக்கம், பொட்காஸ்ட்கள் மற்றும் ஆடியோ ஊடகவியல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்படும். இது இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஊடக தொழில்சார் நிபுணர்களிடையே தொழில்முறை மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், படைப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், செய்திப் பிரிவு பிரதானிகள், ஊடகத் துறை மாணவர்களை ஒன்றிணைத்து ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் நுண்ணறிவு சார்ந்த அனுபவத்தை வழங்கவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஊடக உறவுகளை வலுப்படுத்துவதற்காக கடந்த வருடம் மே மாதம் இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கம் (SLIMFA) நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை முதல், ஊடகத்துறை தொடர்பான முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்துகின்ற குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் வட்டமேசை அமர்வுகள் உட்பட பல நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
முதன் முதலாக நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஊடகவியலாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், ஊடக மாணவர்கள் மற்றும் துறைசார்ந்தோருக்கு SLIMFA அழைப்பு விடுக்கிறது. நிகழ்ச்சி நிரல், பதிவு மற்றும் ஏனைய விடயங்கள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு www.mediafest.lk ஐ பார்வையிடுங்கள்.