Wednesday, December 24, 2025 12:08 pm
துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் லிபிய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
துருக்கி மற்றும் லிபியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் நாடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து லிபிய தலைநகர் திரிப்போலி நோக்கிப் புறப்பட்ட தஸால்ட் போல்கன் 50 ரக தனியார் ஜெட் விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறிப்பாக மின் கசிவு காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஹய்மானா மாவட்டத்தின் கெசிக்காவக் கிராமத்திற்கு அருகில் விமானம் வெடித்துச் சிதறியதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் அல்-ஹத்தாத் உடன் பயணம் செய்த நான்கு உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் மூன்று விமானக் குழுவினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தசம்பவத்தையடுத்து லிபியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அறிவிக்கப்பட்டு, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
துருக்கி அரசு இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் லிபியாவிலிருந்து ஒரு விசேட குழுவும் அங்கு விரைந்துள்ளது.

