Friday, January 30, 2026 9:00 pm
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் நாட்டின் இளம் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ், ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
உடல் ரீதியாக முழு தகுதியுடன் இல்லாத போதிலும், மன உறுதியால் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். போட்டியின் இடையே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுத் வாந்தி எடுத்தார். கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும், களத்தில் ஒரு போர்வீரனைப் போலச் செயல்பட்ட அவர், 6-4, 7-6, 6-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார். அதுவும் 5 மணி நேரத்துக்கும் மேல் போராடி வென்று இருக்கிறார்.
இந்த அரையிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் கார்லோஸ் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு செட்களை அவர் கைப்பற்றியபோது, போட்டி எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் ஸ்வெரேவ் ஆக்ரோஷமாக விளையாடிப் பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில், ஸ்வெரேவ் ஆரம்பத்தில் முன்னிலை வகித்தார். ஒரு கட்டத்தில் ஸ்வெரேவ் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் தனது ஆட்டத்தின் வேகத்தை மாற்றிய அல்காரஸ், 5-5 எனச் சமன் செய்து, இறுதியில் 7-5 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

