Thursday, February 5, 2026 12:20 pm
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்குள்ளான 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலையில் கட்டப்பட்டிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதன்போது சில ஆசியரியர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.
சிரேஸ்ட மாணவர் தலைவன் ஏனைய மாணவர்களை விட அதிக குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளார். மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி றோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அம்பியூலன்சில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இருந்த போதிலும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
எவருக்கும் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

