Tuesday, December 30, 2025 2:40 pm
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது.
சர்வதேச வாகனச் சம்மேளனம் (FIA) மற்றும் ஐக்கிய நாடுகளின் ‘வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த கால நடவடிக்கை’ (Decade of Action for Road Safety) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இவற்றில் 20 சதவீதத்திற்கும் குறைவான கனரக வாகனங்கள் மாத்திரமே கட்டாய வாகனத் தகுதிப் பரிசோதனைக்கு (Roadworthiness Test) உட்படுத்தப்படுகின்றன. ஏனைய வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அண்மைக்காலமாக பாரிய விபத்துகள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
காப்புறுதி நிறுவனங்களின் ‘உடனடித் தீர்வு’ (On-the-spot settlements) முறையினால், பல விபத்துகள் பொலிஸார் அல்லது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளின் உண்மையான தாக்கம் மறைக்கப்படுவதாக AA சிலோன் சுட்டிக்காட்டியுள்ளது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அனைத்து வாகனங்களுக்கும் தகுதிப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு, இலங்கையிலும் குறைந்த செலவிலான, நடைமுறைச் சாத்தியமான கட்டாயப் பரிசோதனை முறையை அறிமுகப்படுத்த AA சிலோன் முன்மொழிந்துள்ளது.

