Saturday, March 28, 2026 8:24 pm
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கியதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
விராட் கோலி, ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது 2026-ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள அனைத்து 19 சீசன்களிலும் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2008 ஏப்ரல் 18 அன்று இதே சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராகத் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய கோலி, இன்று வரை 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடிய ஒரே வீரரும் இவர்தான்.
இதுவரை 267 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 8661 ரன்களுடன் தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். 2016-ஆம் ஆண்டு சீசனில் அவர் குவித்த 973 ஓட்டங்கள் என்பது இன்றுவரை ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ளது. மேலும் 8 சதங்கள் , 63 அரைசதங்கள் அடித்து பல்வேறு சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.

