Wednesday, February 4, 2026 10:32 pm
19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 10வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், அண்டர் 19 உலக கிண்ண வரலாற்றில் இவ்வளவு பெரிய இலக்கை வெற்றிக்கரமாக எட்டிய அணி என்று வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது.
ஸிம்பாப்வேவின் ஹராரோ நகரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், முதலில் துடுப்ப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்கள் குவித்தது. ஃபைசல் ஷினோசாதா 93 பந்துகளில் 110 ஓட்டங்களும், உசைருல்லா நியாசாய் 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களும், எடுத்தனர்.
இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் சேர்த்து வலுவான அடித்தளமிட்டனர்.இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பதிலுக்கு 311 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தொடக்க வீரர், வைபவ் 33 பந்துகளில் 68 ஓட்டன்கள் குவித்தார். 9.3 ஓவர்களில் இந்திய அணி 90 ஓட்டங்கள் சேர்த்தது. ஆரான் ஜார்ஜ், இந்த முக்கியப் போட்டியில் 115 ஓட்டங்கள் (104 பந்துகள்) குவித்து சதமடித்தார். விஹான் மல்ஹோத்ராவுடன் இணைந்து 96 ஓட்டங்கள் கூட்டணி அமைத்த அவர், அணியின் ஸ்கோர் 300 ஓட்டங்களை எட்டியபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் விஹான் மல்ஹோத்ரா 38* (47) , வேதாந்த் திரிவேதி 4* (5) ஆகியோர் நிதானமாக மீதமிருந்த இலக்கை சுலபமாக எட்டினர். இறுதியாக, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அடியெடுத்து வைத்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி பிப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
அரையிறுதியில் 311 ஓட்டங்களை இந்திய அண்டர் 19 அணி எட்டிய நிலையில், இந்த தொடர் வரலாற்றில் வெற்றிக்கரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக, 2006ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 305 ஓட்டங்கள் எடுத்தது. இதே போன்று 250 ஓட்டங்களுக்கு மேல் உள்ள இலக்கை 53 பந்துகள் எஞ்சிய நிலையில், ஒரே அணி இந்த தொடரின் வரலாற்றில் வெற்றிக்கரமாக சேஸ் செய்தது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 16 முறை அண்டர் 19 உலககோப்பை நடைபெற்றுள்ளது. இதில் 10 முறை இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இந்திய அண்டர் 19 அணி 5 முறை சம்பியனானது. 6வது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

