1992ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “முஸ்தபா முஸ்தபா” என பாடி ஆடி ரசிகர்களை கவர்ந்து அறிமுகமானவர் தான் நடிகர் அப்பாஸ். 50 வயதை கடந்துவிட்ட அப்பாஸ் இதுவரை 52 படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடிப்பதை முழுமையாக விட்டுவிட்டு குடும்பத்துடன் நியூசிலாந்து சென்று செட்டில் ஆனார் அப்பாஸ்
10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கவுள்ள அப்பாஸ் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அந்த படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித் குமார், பிரசாந்த் என ஏகப்பட்ட ஆணழகன் நடிகர்கள் உள்ளனர். நடிகர் அப்பாஸ் வந்த புதிதிலும் அப்படித்தான் பார்க்கப்பட்டார். காதல் தேசம் முதல் படமே அவருக்கு இன்று வரை நின்று பேசக்கூடிய படமாக உள்ளது. விஐபி, பூச்சூடவா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என பல படங்களில் லீடு ரோலிலும் துணை நடிகராகவும் நடித்து தூள் கிளப்பியவர் தான் அப்பாஸ். சோலோ ஹீரோவாக அவர் நடித்த படங்கள் பெரிதாக கை கொடுக்காத நிலையில், நெகட்டிவ் ரோல்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தினார். கடைசியாக 2014ம் ஆண்டு வெளியான ராமானுஜம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படம் தான் அவருடைய கடைசி படமாக உள்ளது.