சேர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் 100 ஒற்றையர் வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது ஆடவர்,ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நோவக் ஜோகோவிச் தனது மூன்றாவது சுற்றில் சக செர்பிய வீரரான மியோமிர் கெக்மனோவிச்சை 6-3, 6-0, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
நோவக் ஜோகோவிச் இந்த போட்டியின் முதல் செட்டில் 3-3 என்ற குறுகிய சமநிலைக்குப் பிறகு, ஒன்பது தொடர்ச்சியான ஆட்டங்களை வென்றார்.
இரண்டாவது செட்டை முழுமையாக கைப்பற்றிய அவர், மூன்றாவது செட்டில் கெக்மானோவிச்சிடம் இருந்து ஒரு சிறிய பதில் தாக்குதல் இருந்தபோதிலும் வெற்றியுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச், விம்பிள்டனில் 105 ஒற்றையர் வெற்றிகளைப் பெற்ற ரோஜர் பெடரர், 120 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கும் மகளிர் ஜாம்பவான் மார்டினா நவரதிலோவாவுடன் ஒரு பிரத்யேக கிளப்பில் இணைந்துள்ளார்.
ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனான நோவக் ஜோகோவிச் இப்போது எட்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.
இதை வென்றால், விம்பிள்டனில் அதிக ஒற்றையர் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்வதோடு, ஒட்டுமொத்தமாக 25வது பட்டத்தை வென்றும் சாதனை படைப்பார்.
