Sunday, January 11, 2026 8:17 pm
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லவிருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் தமிழக காவல்துறை விசாரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது பல்வேறு அதிகாரிகள், தவெக தலைவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் உச்சமாக தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடைபெறவுள்ளது. நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக விஜய் டெல்லி செல்லவுள்ளார்.
விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்போது போதிய பாதுகாப்பு அளிக்குமாறு டெல்லி பொலிஸிடம் தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது.. அதை ஏற்றுள்ள டெல்லி பொலிஸ் உரிய பாதுகாப்பு நிச்சயம் அளிக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளது.

