யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு மீண்டெழும் அலைகளென தூரநோக்கை அடிப்படையாக கொண்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025 ,2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எவை, அவை எவ்வாறு முன்னெடுக்கப்படும், அதன்மூலம் மக்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்ககூடிய அனுகூலங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகளால் மேற்படி கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தப்பட்டது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல், சுற்றுலா உட்பட சகல விடயங்களுக்கும் மீண்டெழும் அலைகள் என்ற தூர நோக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டு, கட்டியெழுப்படவுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் விரிவுரையாளருமான சு.கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.