முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
45 வயதான மன்ஹாஸ், ரோஜர் பின்னிக்கு அடுத்த தலைவர் பதவிக்கு முன்னணியில் உள்ளார். தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 28 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் பிசிசிஐயின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின்றி இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதுன் மன்ஹாஸ் இந்திய தேசிய அணிக்கு விளையாடாவிட்டாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் வீரர் ஆவார்.
18 ஆண்டுகால தனது கிரிக்கெட் வாழ்க்கையில், 157 முதல் தர போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 9,700 க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
2007-08 ரஞ்சி டிராபி வென்ற டெல்லி அணியில் ஒரு முக்கிய வீரராகவும், ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் ,சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.