Sunday, April 5, 2026 9:38 pm
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு அசாதாரண வானிலை, ஐக்கிய அரபு அமீரகம் ,சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைக் கடுமையாகத் தாக்கி, கடுமையான இடியுடன் கூடிய மழையைப் பொழிவித்தது. பொதுவாக வறண்ட பாலைவனக் காலநிலை நிலவும் அரேபிய தீபகற்பத்தில், வெறும் சில நாட்களில் 150 மி.மீ. வரை மழை பதிவானது.
சவூதி அரேபியாவின் வடக்கே ஒரு ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக உதவிய, அசாதாரணமான வலுவான ஜெட் நீரோட்டத்தால் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டது . இது, இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதமான வெப்பமண்டலக் காற்றை ஈர்த்து, கடுமையான புயல்களைத் தூண்டியது.
ஓமானில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட புயல்களின் போது, கனமழையுடன் டென்னிஸ் பந்து அளவுள்ள ஆலங்கற்களும் விழுந்தன. கட்டாரின் தலைநகரான தோஹாவில் அதே நாளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வியாழக்கிழமை மாலையில் மேலும் இடியுடன் கூடிய மழை உருவானது. இது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புயல் கோடாக ஐக்கிய அரபு அமீரகத்தைக் கடந்து, துபாய், அபுதாபி போன்ற அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளைத் தாக்கியது . மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசியதாகவும், பெரிய ஆலங்கட்டி மழை , கடுமையான மின்னல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கனமழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

