அனைத்து பெண்கள் , சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்தார்.
“சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலனுக்காக எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் சமத்துவம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான நமது முயற்சியில் உறுதியுடன், ஒற்றுமையுடன், அசைக்க முடியாத வகையில் முன்னேறுவதற்காக இன்று நாம் ஒன்றுகூடுகிறோம்” என்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஐ.நா. உலக பெண்கள் மாநாடு என்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டின் 30வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது என்றும், பெண்களின் உரிமைகள் மனித உரிமைகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.