நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வேலணை, நீர்வேலி , வடமராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் பல சிக்கல்கள் உள்ளன. வீதிகள், நீர், விவசாயம், வேலைவாய்ப்பின்மை, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பிரச்சினைகள் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளில் பல, உங்கள் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளால் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளாகும். ஆனால் அது சரியாக நடைபெறவில்லை.
வடக்கு, கிழக்கில் உள்ள பிரச்சினைகள் போரினால் ஏற்பட்டவை என்று கூறினார்கள். போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இந்தப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றமடைந்துள்ளதா?
நாடு வீழ்ந்திருக்கும் சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கும், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கும் அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லா விடயங்களும் இன்னும் சரியாக நடக்கவில்லை என்பதும், பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். அரசாங்கம் அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது எதிர்காலத்தில் மக்கள் அந்த பயன்களைப் பெறுவார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டது. மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நாட்டில் மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார்.