திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக பொன்முடி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 6ம் திகதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பொன்முடியின் இந்த பேச்சிற்கு எம்.பி. கனிமொழியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.
அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ஓசி டிக்கெட் என்று கூறி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.