Friday, March 27, 2026 4:15 pm
அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தி, தேர்தலுக்குத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுகவிடம் 15 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியதாக நேற்று தெரிவித்தார். ஆனால், அதிமுக தரப்பில் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாக அவர் கூறி இருந்தார். இது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், “ஆட்சி , அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு. ஆனால் அதிமுகவின் அணுகுமுறை ஏமாற்றமளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.
“ஜெயலலிதா இருந்தபோது கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தலைமையிடம் அந்தப் பக்குவம் இல்லை. நாங்கள் 12 முதல் 15 தொகுதிகள் வரை கேட்டும், அவர்கள் தர மறுத்துவிட்டனர்.” என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, அதிமுக உடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் புதிய தமிழகம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 60 முதல் 70 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

