கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இவர்கள் மீது கடத்தல்கள், காணாமல் போதல்கள் , துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிள்ளையானிடமும், இனியபாரதி என்று அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. புஷ்பகுமாரிடமும் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்ததாக அரசு நடத்தும் சிலுமின செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இந்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், கொழும்பின் மடகலபுவ ,கெசெல்வத்தவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
2007-2008 காலகட்டத்தில் பிள்ளையானால் இயக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு, கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள் மீதான தொடர் படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கட்டாயக் காணாமல் போதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.